New Delhi: புதுடெல்லி: வடக்கு டெல்லியின் மஜுன் கா டில்லா பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் குமார். ஆட்டோ ஓட்டுனரின் மகனான அவர் தனது குடும்பத்தின் தேவைகளுக்காக டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சிறு வயதில், சைக்கிள் டயரை பிரம்பால் அடித்து உருட்டிச் செல்வதில் வல்லராக ஹரிஷ் இருந்துள்ளார். இதனைப் பார்த்த கிக் வாலிபால் பயிற்சியாளர் ஹேம்ராஜுக்கு ஹரிஷ் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை இந்திய விளையாட்டுக் கழகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தீவிர பயிற்சியை அளித்தார்.
காலை நேரத்தில் டீக்கடையில் வேலை பார்த்த ஹரிஷ் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவரைப் பார்த்தவர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். இதனை பொருட்படுத்தாத அவர் தனது திறமையின் மூலம் இந்திய கிக் பால் அணியில் இடம்பிடித்தார்.
கடந்த மாதம் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதற்கு ஹரீஷின் சிறப்பான ஆட்டமும் ஓர் காரணம். இந்த நிலையில், நாடு திரும்பிய பின்னர் அவரை வரவேற்க ஆளில்லை. பின்னர் தனது குடும்ப தேவைகளுக்காக மீண்டும் டீக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ஹரீஷ். இதுகுறித்து என்.டி.டி.வி.க்கு பேட்டியளித்த அவர், “கடினமான சூழல்களை எதிர் கொண்டு இந்திய அணியில் இடம்பெற்றேன். நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு வேதனையை தரவில்லை. ஆனால் நான் பதக்கம் பெற்று வீடு திரும்பியபோது என்னை யாரும் வரவேற்கவில்லை. இதுதான் எனக்கு விரக்தியை அளித்தது” என்றார்.
ஹரீஷ் மீது அவரது அம்மா இந்திரா தேவி அதிக பாசம் கொண்டவர். வீட்டில் பணப் பிரச்னை இருந்தாலும் மகனின் கல்விக்காகவும், அவர் பயிற்சி பெறுவதற்காகவும் ஒரு குறிப்பிட்ட பணத்தை தாயார் இந்திரா தேவி சேமித்து வைத்திருந்தார்.
தனது பயிற்சிக் காலங்களின்போது டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் பஸ் கண்டக்டரின் கண்ணில் படாமல் ஹரீஷ் ஒளிந்துக் கொள்வாராம். தனக்கு அரசு உதவி செய்யவில்லை என அவர் குற்றம் சொல்லவில்லை. ஆனால் ஆட்டோ டிரைவரின் மகனான தனக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமான கோரிக்கையை ஹரீஷ் வைத்துள்ளார்.