70 லட்சம்பேருக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
ஹைலைட்ஸ்
- நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவான மாநிலமாக அசாம் உள்ளது
- அசாமில் ஒரேயொருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
- நாளை முதல் அசாமில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
Guwahati: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக பாஜக ஆளும் அசாமில் ஊரடங்கு உத்தரவை நாளை முதல் தளர்த்தப்படுகிறது.
இந்த முடிவு முதல்வர் சர்வானந்த சோனோவால் தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதன்படி அசாமில் அரிசி, மசாலா ஆலைகள், தேயிலை தொழில்கள் உள்ளிட்டவை நாளை முதல் வழக்கம்போல செயல்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விவசாயிகள் நாளை முதல் விளை நிலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அடுத்து வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படவுள்ளது.
70 லட்சம் பேருக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. அவர்களில் 58 லட்சம் பேர் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவச அரிசியைப் பெறுவார்கள். 2.70 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய பொருட்களை நாளை முதல் லாரிகள் ஏற்றிச் செல்லலாம்.
அசாமில் ஒரேயொருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தவிர்த்து டெல்லி நிஜாமுதீன் மசூதி மாநாட்டில் பங்கேற்று திரும்பி வந்த சுமார் 500 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 24-ம்தேதி நள்ளிரவு முதற்கொண்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை நாட்டில் 1,300-யை தாண்டியுள்ளது.
உலகளவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.