அசாமின் திப்ருகரில் உள்ள புர்ஹி திஹிங் ஆற்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டில் உள்ளதாக ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Guwahati: கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் அசாமில் உள்ள ஆறு ஒன்று 2 நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விபத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் இடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலம்திப்ருகர் மாவட்டத்தில் புர்ஹி திஹிங் என்ற சிறிய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆறு அமைந்துள்ளது.
இதனையொட்டி ஆயில் இந்தியா நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தால் குழாயில் வெடிப்பு உண்டாகி தீப்பற்றியது. இது மளமளவென ஆற்றைச்சுற்றலும் பரவியது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிவப்பு வண்ணத்தில் தீப்பற்றியெரிய, அதன்மேல் அடர்ந்த கரும்புகை வானைநோக்கி செல்வதுபோல் அந்த பகுதி காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர். பொதுமக்கள் யாரேனும் சிலர் குழாயை உடைத்து, அதனால் எண்ணெய் ஆற்றுக்குள் பரவியிருக்க கூடும் என அவர்கள் சந்தேகம்தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் மேலே எழுந்த கரும்புகையால் சுற்றுப்புறத்தில் காற்று மாசுபட்டுள்ளது.
இதுதொடர்பாக NDTV க்கு பேட்டியளித்த ஆயில் இந்தியா நிறுவனத்தின் மூத்த மேலாளர் திரிதிவ் ஹசாரிகா, கடந்த 31-ம்தேதி இரவு விபத்து ஏற்பட்டதாகவும் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தீப்பற்றியெரிந்ததாகவும் கூறினார்.
சிறு கோளாறு காரணமாக குழாயின் வழியே வரும் கச்சா எண்ணெய் முக்கிய குழாய் தொட்டிக்கு செல்லவில்லை. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக,குழாயில் குறைந்தது 2 இடங்களில் ஓட்டை ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகள் தீ விபத்தை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.