Guwahati: அசாமில் நகரத்திற்குள் புகுந்து காட்டு யானை ஒன்று பீதியை ஏற்படுத்தியது. இதனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள வன விலங்கு சரணாலயத்தில் யானைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை அங்கிருந்த யானை ஒன்று நகரத்திற்குள் புகுந்தது.
யானைப் பாகன் இன்றி வந்த யானையை பார்த்து மக்கள் அச்சம் அடைந்தனர். காட்டு யானையும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுற்றித் திரிந்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. யானை சென்ற வழியில் எல்லாம் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
இதனால் கவுகாத்தியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக சமாதானம் அடைந்த காட்டு யானை மீண்டும் வனத்திற்குள் சென்று விட்டது.
உணவைத் தேடி அந்த யானை நகரத்திற்குள் வந்திருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியாகின. மக்களுக்கும், யானைக்கும் இடையே எந்த மோதலும் ஏற்படாத வகையில் உள்ளூர் போலீசாரும், வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.