This Article is From Feb 19, 2020

'பான் கார்டு, வங்கிக் கணக்கு செல்லுபடியாகாது' -என்.ஆர்.சி. குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

'பான் கார்டு, வங்கிக் கணக்கு செல்லுபடியாகாது' -என்.ஆர்.சி. குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் என்.ஆர்.சி. நடத்தப்படுகிறது.

Guwahati:

பான் கார்டு, வங்கி கணக்கு, நில ஆவணங்களைப் பயன்படுத்தி என். ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குடிமக்கள் இடம் பெற முடியாது என்றும், இந்த ஆவணங்களை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்றும் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

அசாமில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பில் 19 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது. இவர்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை உறுதி செய்வதற்காக வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லையில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

என்.ஆர்.சி. பட்டியலில் இடம்பெறாதவர்கள் தீர்ப்பாயத்தை அணுகலாம். தீர்ப்பாயம் அவர்களை நிராகரித்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். என்.ஆர்.சி.யில் இடம் பெறாதவர்களுக்குச் சட்ட உரிமைகள் இருக்கும் வரையில் அவர்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. 

இன்று கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மனோஜித் புயான், பார்திவ்ஜோதி சைகியா ஆகியோர் 2016-ல் இதே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கொள் காட்டியுள்ளனர். அந்த உத்தரவில் குடியுரிமையை நிரூபிப்பதற்கு பான் கார்டு, வங்கி ஆவணங்களைச் சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தீர்ப்பாயத்தை அணுகியிருந்த ஜபீதா பேகம் என்பவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் கவுகாத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜபீதா பேகம் அவரது தந்தை மற்றும் கணவரின் அடையாள சான்றிதழை வைத்துள்ளார். இவற்றை ஜபீதாவின் ஊர்த் தலைவர் அளித்திருக்கிறார். ஆனால் தனது பெற்றோருக்கும் தனக்கும் உள்ள உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனைக் காரணம் காட்டி அவர் இந்தியக் குடிமகன் இல்லை என்ற முடிவுக்கு வந்ததாகத் தீர்ப்பாயம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் இதே நீதிபதிகள்தான் இன்னொரு வழக்கில் வாக்காளர் அடையாள அட்டையை குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்று உத்தரவிட்டிருந்தனர். 

அசாம் மாநிலத்தில் கடந்த 1979 - 1985 ஆண்டுகளில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் அங்குத் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. 

.