New York: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 71 வயது சீக்கிய முதியவரை இரண்டு இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவன் கலிபோர்னியாவின் போலீஸ் அதிகாரி மகன். பிள்ளையின் இந்த செயல் குறித்து அந்த தந்தை முகநூலில் கதறியுள்ளார்.
சாகிப் சிங் நட் என்ற முதியவர், கடந்த 6 ஆம் தேதி கலிபோர்னியாவில் சாலை ஓரமாக அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை நோக்கி வரும் 18 வயதான டைரோன் மெக் ஆலிஸ்டர் மற்றும் 16 வயது சிறுவன், சாகிப் நட் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிறிது நேரத்தில் இருவரும் சேர்ந்து முதியவர் சாகிப்பை, சரமாரியாக தாக்குகின்றனர். இதனால் சுருண்டு விழுகிறார் சாகிப் சிங். இந்த சம்பவம் வீடியோவாக பதிவானதை அடுத்து, போலீஸ் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. அப்போது தான், டைரோன் மற்றும் 16 வயதுச் சிறுவன் குறித்து தகவல் வருகிறது. இதையடுத்து, இருவரும் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். அப்போது, டைரோன், கலிபோர்னியா மாகாணத்தின் காவல் துறையின் தலைவர் டேரில் மெக் ஆலிஸ்ட்டரின் மகன் என்பது தெரிய வருகிறது.
ஒரு போலீஸின் மகனே இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளானே என்று இந்த விஷயம் பூதாகரமானது. இதையடுத்து, தனது வருத்தம் குறித்து முகநூலில் பதிவு செய்தார் டேரில்.
அவர், ‘என் மனைவி, மகள்கள் மற்றும் நான் இந்தக் குற்றம் குறித்து தலைக் குனிந்து நிற்கிறோம். ஓரு போலீஸின் மகன் இதைப் போன்ற ஓர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். நாங்கள் வன்முறை பிரயோகிக்கச் சொல்லியோ, பிறர் மீது வெறுப்பை உமிழவோ இன வெறியையோ ஊட்டி எங்கள் குழந்தைகளை வளர்க்கவில்லை. ஆனால், சேர்க்கை சரியில்லாமல் என் மகன் டைரோன் எங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறான். இந்நிலையில் இப்படிப்பட்ட திடுக்கிடும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது என் மகன் தான் என்று தெரிந்தவுடன் அவனை கண்டுபிடிக்க போலீஸுக்கு உதவி செய்தோம்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீஸ். இன வெறித் தாக்குதலா என்ற கோணத்திலும் இந்த விவகாரம் குறித்து காவல் துறை விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் கலிபோர்னியாவில் சீக்கியர் ஒருவர் மீது நடக்கும் இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.