மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
Mumbai: மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அவை போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களை தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட யுக்தியை சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்த இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி தேர்தலுக்கு முன்பாக இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துக் கொள்ளும்.
முன்னதாக பாஜகவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல்கள் வெளியானது. இது உண்மையல்ல என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஞாயிறன்று பாஜக தலைவர் அமித் ஷா மகாராஷ்டிராவுக்கு செல்கிறார். அவருடன் சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதன்பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் சிவசேனா 128 தொகுதிகளிலும், பாஜக 162 தொகுதிகளிலும் போட்டியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. 2014 அக்டோபரில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் சிவசேனா அமைச்சரவையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.