கடந்த ஒரு மாதத்தில் கிஷ்த்வார் மாவடத்தில் நடக்கும் மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்
Kishtwar: ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் கிஷ்த்வார் மாவட்டத்தில், மினி பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கெஷ்வானிலிருந்து கிஷ்த்வார் பகுதிக்கு மினி பேருந்து இன்று காலை சென்று கொண்டிருக்கும் போது, பேருந்தின் ஓட்டுநர் நிலை தடுமாறினார். இதனால், பஸ் 300 அடி பள்ளத்தில் விழுந்தது.
‘இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். 13 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
பேருந்து 30 பேரை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன
பள்ளத்தில் விழுந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் 8 பேரை விமானம் மூலம் மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமும் தரப்படும் என்று கிஷ்த்வார் துணை கமிஷனர் அங்ரேஸ் சிங் ரானா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹுபூபா முப்டி, ‘கிஷ்த்வார் சாலை விபத்தில் தங்களுக்கு நெருக்கமான உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடக்கும் மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்.