துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பேட்ரிக் குரூசிஸ் என்பது தெரியவந்துள்ளது
ஹைலைட்ஸ்
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
- ஒன்றுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது
- அசம்பாவிதத்தை தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
El Paso, United States: அமெரிக்காவில் வால்மார்ட் வர்த்தக கடைக்குள் புகுந்த தீவிரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்தபோது வால்மார்ட் கடைக்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
உயிரிழப்பை அறிவித்த டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபாட், ‘டெக்சாஸ் மாகாண வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று' என்று கூறினார்.
துப்பாக்கிச் சூட்டின்போது அமெரிக்கர்கள் மட்டுமல்லாது மெக்சிகோவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதி டெக்சாஸ் மாகாணத்தின் ஆலன் பகுதியை சேர்ந்த பேட்ரிக் குரூசிஸ் என்பது தெரியவந்துள்ளது. காயம் அடைந்த 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டெக்சாஸ் மாகாண கவர்னருடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். குற்றச் செயலில் ஈடுபட்ட பேட்ரிக்கை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டின்போது சுமார் 3 ஆயிரம் பேர் வரை வால்மார்ட் வணிக வளாகத்திற்குள் இருந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை ஒருவர் மட்டுமே நடத்தியிருக்க முடியாது என்று கூறப்படுகிறது. நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கருப்பு டி ஷர்ட், கேமோ பேன்ட் அணிந்துள்ளார். காதை மறைக்க கனத்த துணியும், தலையில் ஹெட்போனும் வைத்தவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.