This Article is From Sep 10, 2018

'பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மத்திய அரசு பொறுப்பல்ல!'- அமைச்சர் விளக்கம்

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு எதிராக இன்று ‘பாரத் பந்த்’ காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து வருகிறது

New Delhi:

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு எதிராகவும், வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று ‘பாரத் பந்த்’ காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் இந்த பந்துக்கு இந்திய அளவில் 21 எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இன்று டெல்லியில் பாரத் பந்த் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் மோடிக்கு, 'எரிபொருள் விலை உயர்வு குறித்தும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தும் ஏன் பேச மறுக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி, இந்த பந்துக்கு ஆதரவு தெரிவிக்காத போதும், அக்கட்சியின் சஞ்சய் சிங் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சரத் பவார், ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி, இந்த பந்திலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஸ்டிரைக்கின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் பந்த் குறித்து முக்கிய அப்டேட்ஸ்,

  1. ராகுல் காந்தி டெல்லியின் ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று அங்கு நடந்துவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
  2. கர்நாடகாவின் ஆளுங்கட்சியான மஜத இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பெங்களூருவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
  3. கர்நாடகாவில் உள்ள உபர், ஓலா, ஆட்டோ டிரைவர்கள் சங்கம், மற்றும் பிற போக்குவரத்து அமைப்புகளும் இந்த பந்தில் பங்கெடுத்துள்ளன.
  4. ஹுபால்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  5. ’காங்கிரஸ் கட்சியினர் இந்த பந்தின் போது எந்த வித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடக் கூடாது. நாம் காந்தியின் கட்சியைச் சேர்ந்தவர்கள். எனவே வன்முறையோடு நமக்கு தொடர்பு இருக்கக் கூடாது’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜய் மேகன் தெரிவித்துள்ளார்.
  6. திரிணாமூல் காங்கிரஸ், பந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  7. தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உயர்ந்து வரும் எரிபொருள் விலைக்கு எதிராகவும், ரூபாய் வீழ்ச்சிக்கு எதிராகவும் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார். 
  8. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசிவாத காங்கிரஸ் முழு வீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
  9. ஒடிசா மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
  10. 'பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது எங்கள் கையில் இல்லை. எண்ணெய் உற்பத்தி நாடுகளில், உற்பத்தி குறைந்துள்ளது. அதுவே காரணம். இது நிதி சார்ந்த சிக்கல். எரிபொருள் விலையேற்றத்துக்கு மத்திய அரசு காரணம் கிடையாது என்பது மக்களுக்குத் தெரியும்' என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். 

.