This Article is From Jun 18, 2019

எத்தனை விக்கெட்டுகள்? பீகார் அமைச்சரின் அலட்சிய கேள்வியால் சர்ச்சை!

மூளைக்காய்ச்சல் குறித்த குழந்தைகளின் நிலையை கட்டுக்குள் வைப்பதை விட, கிரிக்கெட் ஸ்கோரை தெரிந்து கொள்வதிலே ஆர்வமாக இருக்கிறார் மங்கள் பாண்டே என எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மங்கள் பாண்டே கிரிக்கெட் ஸ்கோர் குறித்து கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • முசாபர்பூரில், செய்தியாளர்களை சந்தித்த பீகார் அமைச்சர் மங்கள் பாண்டே
  • மூளைக்காய்ச்சலால், 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
  • எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன என்று கேள்வி எழுப்பினார்.
Muzaffarpur (Bihar):

பீகாரில் மூளைக்காய்ச்சல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே கிரிக்கெட் நிலவரம் பற்றி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதில், உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக தற்போது அதிகரித்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும், 83 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தவிர அங்குள்ள கெஜ்ரிவால் மருத்துவமனையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 290 குழந்தைகள் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பீகாரின் முசாபர்பூர் கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேற்று ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, முசாபர்பூரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்ததால், எத்தனை விக்கெட் வீழ்ந்துள்ளது என்று மங்கள் பாண்டே கேட்க, அதற்கு 4 என பதில் வந்தது.

குழந்தைகள் உயிரிழப்பைக் காட்டிலும் கிரிக்கெட் ஸ்கோர் தான் முக்கியமா? என கேட்டுள்ள எதிர்க்கட்சிகள், மங்கள் பாண்டே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தள், காங்கிரஸ், ஹிந்துஸ்தான் ஆவம் மோர்சா, இடது சாரிகள் போன்றவைகள் மங்கள் பாண்டே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தின.

இது ஒருபுறம் இருக்க முன்னதாக நடந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், மூளைக்காய்ச்சல் தொடர்பாக ஹர்ஷவர்தன் பேசிக்கொண்டிருக்க மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் தூங்கிக்கொண்டிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

(With inputs from Agencies)

.