தன் தலைமையிலான அரசு குறித்து ட்ரம்ப் (Donald Trump) பேச, அரங்கிலிருந்தவர்கள் சிரித்துள்ளனர்
ஹைலைட்ஸ்
- அமெரிக்க ‘இறையாண்மையை’ குறித்து ட்ரம்ப் பேசும்போது தான் சம்பவம் நடந்தது
- என் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, ட்ரம்ப்
- ட்ரம்ப், அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து 5000 தவறான தகவல்களை கூறியுள்ளார்
United Nations: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஐ.நா பொதுச் சபை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, அங்கிருந்த மக்கள் அவரது கருத்தை கேட்டு சிரித்துள்ளனர். இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் ‘இறையாண்மையை’ நிலை நாட்டும் விதத்தில் ஐ.நா சபையில், நேற்று ஒரு உரை நிகழ்த்தியுள்ளார் ட்ரம்ப். அப்போது அவர், எப்படி மற்ற தேசங்கள் அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்டன, அதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்ற ரீதியில் பேசினார். ட்ரம்ப், உரையை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம், வாய்விட்டுச் சிரித்துள்ளது.
குறிப்பாக, எப்படி தன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், இதற்கு முன்னர் எந்த அரசும் எட்டாத ஒரு உயரத்தை அடைந்தது என்று பேசிய போது, அரங்கத்தில் வெடிச் சிரிப்பு. இது ட்ரம்பை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘இப்படிப்பட்ட ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. ஆனால், பரவாயில்லை’ என்று கூறிவிட்டு தொடர்ந்து பேசினார். கிட்டத்தட்ட 34 நிமிடங்களுக்கு அவர் உரையாற்றினார். அதன் பிறகு மக்களும் அவரின் பேச்சை அமைதியாக கேட்டனர். ஆனால், ட்ரம்ப் உரையை ஆரம்பித்த உடன் அரங்கில் இருந்த மக்கள் சிரித்தது அமெரிக்க அதிபருக்கு பெரும் அவமானத்தைக் கொடுத்ததாக பார்க்கப்படுகிறது.
‘அவர் வெகு காலமாக ‘உலகம் நம்மைப் பார்த்து சிரிக்கிறது. அவர்கள் நம்மை முட்டாள்கள் என்று நினைக்கின்றனர்’ என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளார். ஆனால் ஒரு அதிபரைப் பார்த்து மக்கள் இப்படிச் சிரித்தது இதுவே முதல் முறை. இது கண்டிப்பாக ஏற்கெனவே அவருக்குள் இருக்கும் பயத்தை மேலும் அதிகரிக்கும்’ என்று நடந்த சம்பவம் குறித்து விளக்குகிறார் ப்ரூக்கிங்கிஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த தாமஸ் ரைட்.
அமெரிக்காவில் மிட்-டெர்ம் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், தான் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் எப்படி அமெரிக்க அரசு செயல்பட்டது என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார் ட்ரம்ப். இந்நிலையில் ஐ.நா பொதுச் சபையில் ட்ரம்பைப் பார்த்து பெரும் மக்கள் கூட்டம் சிரித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)