Atal Bihari Vajpayee Death Anniversary: குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல தலைவர்கள் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
New Delhi: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தை (Atal Bihari Vajpayee Death Anniversary) முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாயின் (Vajpayee) வளர்ப்பு மகளான நமிதா கவூல், பேத்தி நிஹாரிகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தனது 93 வயதில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாஜக அலுவலகங்களில் வாஜ்பாயின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.
வாஜ்பாயின் (Atal Bihari Vajpayee) பிறந்தநாளான டிசம்பர் 25-ம்தேதி நல்லாட்சி தினமாக பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது. மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இன்று காலை அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். பாஜக நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.