New Delhi: 1957ஆம் ஆண்டில், பாராளுமன்றத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் பேசிய முதல் உரையால் கவரப்பட்ட அப்போதைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒரு வெளிநாட்டு பிரமுகரிடம் வாஜ்பாயை அறிமுகப்படுத்திய பொழுது 'என்றவாது ஒரு நாள், இந்த இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆவான்' என பெருமையாக கூறியுள்ளார். நேரு அவர்கள் கணித்தபடியே, அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டில் தொடங்கி 13 நாட்கள், 1998ஆம் ஆண்டில் தொடங்கி 13 மாதங்கள் மற்றும் 1999ஆம் ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகள் என இந்திய நாட்டை ஆண்டிருக்கிறார் வாஜ்பாய்.
இந்திய அரசியலில் பெரும்பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கு சவால்விடக்கூடிய முதல் அரசியல்வாதியாக இருந்தார் வாஜ்பாய். இந்திய தேசத்தை 5 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்த, முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர்.
தனது 47 வருட பாராளுமன்ற அரசியல் அனுபவத்தில், தனது அறிவுத்திறன் மற்றும் சொற்பொழிவாற்றலால் அனைவரையும் வியக்கவைத்தவர் வாஜ்பாய்.
"அதிகாரத்திற்கான ஆட்டங்கள் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். வெவ்வேறு அரசுகளும், ஆட்சியும் வரும், போகும். கட்சிகள் உருவாகும், கலைக்கப்படும். ஆனால், இந்த நாடும் நாட்டின் ஜனநாயகமும் என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்" என மே 1996இல் தனது அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் பேசினார் வாஜ்பாய். அந்த வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு வீழ்த்தப்பட்டாலும், அதற்கு பின்னர் மீண்டும் இரண்டு முறை பிரதமர் ஆக்கப்பட்டார் வாஜ்பாய்.
"பெரும்பான்மையின் முடிவிற்கு நாங்கள் தலைவணங்குகிறோம்; ஆனால், நமது தேசியப் பணியை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, இதோ எனது ராஜினாமா" என எவரும் மறக்கமுடியாதபடி அன்று வாஜ்பாய் பேசிய அந்த வீடியோ யூட்யூப்பில் இன்றளவிலும் பிரபலம்.
1998ஆம் ஆண்டில் பொக்ரான் அணுகுண்டு சோதனையின் பொழுது, அவர் பேசியதும் மிக பிரபலம் "அணுசக்தி சோதனைகளை மக்கள் விமர்சிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 1974ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி அணுகுண்டு சோதனைகள் நடத்தியபொழுது, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் அதை வரவேற்றோம். அப்பொழுது தேசத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருந்ததா என்ன?" என பாராளுமன்றத்தில் கேட்டார்.
கவிதைகள் எழுதுவது என்றால் வாஜ்பாய் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மணிநேரம் பேசக்கூடிய விஷயங்களைக் கூட, தந்திகள் எழுதும்பொழுது சின்ன சின்ன வார்த்தைகளில் அழகாக சுருக்கி எழுதக்கூடியவராக இருந்தார்.
ராஜ்யசபாவில் 1962ஆம் ஆண்டில் நுழைந்த வாஜ்பாய், 9 ஆண்டுகள் கழித்து 1971ஆம் ஆண்டில் தேர்தலில் வென்றார். லோக் சபாவிற்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1975ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி ஆட்சியில், சிறையிலே பல மாதங்களை கழித்தார்.
1977ஆம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தபொழுது, வாஜ்பாய் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
மூன்று முறை பிரதமராக பதவியேற்றுள்ளார் அடல் பிஹாரி வாஜ்பாய்.
1999ஆம் ஆண்டில், வாஜ்பாயின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றபொழுதும் கூட, சற்றும் தளராமல் மறுமுறை நடத்தப்பட்ட தேர்தலிலும் ஜெயித்து காட்டினார்.
தனது அரசியல் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட்ட திரு.வாஜ்பாய் அவர்கள், பல மோசமான தோல்விகளையும் சந்தித்தவர். மொரார்ஜி தேசாய் அவர்களின் பதவிக்காலம் முடிந்து ஜனதா கட்சி கலைக்கப்பட்ட பின் 1980ஆம் ஆண்டில், தனது நீண்ட கால நண்பர் மற்றும் அரசியல்வாதியான L.K.அத்வானியுடன் இணைந்து 'பாரதிய ஜனதா கட்சி'யை தோற்றுவித்தார் வாஜ்பாய். ஆனால், மொத்த 545 பாராளுமன்ற தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்தது. தனது பிறப்பிடமான குவாலியர் தொகுதியில் போட்டியிட்ட வாஜ்பாய் அவர்களும் தோல்வியை தழுவினார்.
1990களில் 'ராம் ஜென்ம பூமி இயக்கம்' மூலமாக, இந்தியாவில் உள்ள இந்து மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது பாரதிய ஜனதா ஆட்சி. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் இருந்த 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்கு ஒரு கோவிலை கட்டவேண்டும் என்பதே அந்த இயக்கத்தின் குரலாக இருந்தது. 1992ஆம் ஆண்டில் 'பாபர் மசூதி' இடிக்கப்பட்டபொழுது, 'மோசமான செயல்' என அதை கண்டித்து குரல் கொடுத்த ஒரே பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் மட்டுமே.
கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் முன்னேறி மக்களின் அபிமானத்தை வென்று, 1999ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த வாஜ்பாய் முழுதாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
1999ஆம் ஆண்டில் கார்கில் போர் முடிந்திருந்த சமயத்தில், சில பா.ஜ.க தலைவர்கள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அரசு சார்பாக ஏதேனும் உயரிய விருதினை வழங்க வேண்டுமென ஆலோசித்தனர். ஆனால், அவர் ஆட்சியில் இருந்த வரை அவருக்கு அப்படி எந்த விருதும் அளிக்கப்படவே இல்லை. 16 ஆண்டுகள் கழித்து, 2015ஆம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருது அவரை தேடி வந்தபொழுது, அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். 2009ஆம் ஆண்டு முதலே, உடல்நலக்குறைவு காரணமாக வெளியே எங்கும் அதிகம் காணப்படாமல் வீட்டிலேயே இருந்தார் வாஜ்பாய்.
வாஜ்பாய் அவர்களது அனுபவம் மற்றும் அரசியல் சாதுர்யத்தின் மீதான மரியாதையின் பிரதிபலிப்பாகத்தான், டெல்லியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்த அரசியல்வாதிகளின் கூட்டத்தை பார்க்க முடிந்தது. ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டபொழுது, முதல் ஆளாக வந்து அவரை நலம் விசாரித்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.