New Delhi: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இன்று அவரின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடக்கிறது.
சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5:05 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர், பேச்சாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் வாஜ்பாய்.1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-ம் ஆண்டு 13 மாதங்களும், 1999-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். காங்கிரஸ் அல்லாது 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்த ஒரு ஆட்சி, வாஜ்பாயினுடைய ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிக்கு வாஜ்பாயிக்கு ஸ்மிரிதி ஸ்தால் நினைவிடத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் மறைவு குறித்து நேற்று வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த மோடி, ‘இது சகாப்தத்தின் முடிவு. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தந்தையை இழந்தது போல இருக்கிறது. இந்தியாவின் உண்மையான மகன் அவர். அடல்ஜி மறைந்திருக்கலாம். ஆனால், அவரின் பார்வை, யோசனை, எண்ணம் இந்தியர்களான நமக்கு தூண்டுகோலாக இருக்கும்’ என்று பேசினார்.
வாஜ்பாயின் இறுதிப் பயணத்தின் லைவ் அப்டேட்ஸ்:
5.10: அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது
5.05: துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
5.00: வாஜ்பாயின் வளர்ப்பு மகள் அவருக்கு கொல்லி வைத்தார்
4.15: பிரதமர் மோடி தனது இறுதி மரியாதையை செலுத்துகிறார்.
4.12: முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்துகின்றனர்
4.10: இறுதிச் சடங்கு தொடங்கியது
3.55 பிரதமர் மோடி, ராகுல் காந்தி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் என பலரும் இறுதி மரியாதை செலுத்த கூடியுள்ளனர்
3.50: அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட இருக்கும் ராஷ்ட்ரிய ஸ்மிரிதி ஸ்தலத்துக்கு எடுத்து வரப்பட்டது.
3.15: வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட இருக்கும் ராஷ்ட்ரிய ஸ்மிரிதி சித்தல், என்ற இடத்தில் பணிகள் நடந்து வருகின்றன. 10 - 15 ஆயிரம் பேர் வரை இறுதி மரியாதை செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நாட்டு பிரதிநிதிகளும் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
03:01 PM- சூரத்தில் இருக்கும் குருகுல் மாணவர்கள், வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தியபோது.
02:14 PM- வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் ஆரம்பித்தது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
02:06 PM- பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து, வாஜ்பாயின் உடல் ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
01:48 PM- பூட்டான் மன்னர் ஜிக்மே கேசார் மற்றும் வங்க தேச வெளியுறவுத் துறை அமைச்சர் அபுல் ஹாசன், வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள புது டெல்லிக்கு வந்துள்ளனர்.
1:33 PM- பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்திய போது.
12:52 PM- பாஜக தலைமை அலுவலகத்தில் இருக்கும் வாஜ்பாய் உடலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
12:27 PM- வாஜ்பாயின் மறைவை அடுத்து, ராஷ்டிரபதி பவனில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12:21 PM- டெல்லி, ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தாலில் நடக்கவுள்ள வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் 10,000 முதல் 15,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒருங்கிணைப்புகளை மூன்று மத்திய அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களுக்கென்று தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12:11 PM- பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் அவரது மகள் பிரதீபா அத்வானி, வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
11:58 AM- பாஜக தலைமை அலுவலகத்தில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
11:20 AM- பாலிவுட் நடிகர் ஷாருக் கான், ஒரு வீடியோ மூலம் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ‘அவர் வெறும் ஒப்பற்ற அரசியல் தலைவர் மட்டுமல்ல. மிகச் சிறந்த கவிஞரும் ஆவார்’ என்று வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார் ஷாருக்.
11:15 AM- பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
10:35 AM- பாஜக தலைமை அலுவலகத்துக்கு கடைசி முறையாக எடுத்துச் செல்லப்படும் வாஜ்பாயின் உடல்
10:18 AM- வாஜ்பாயின் உடல் கிருஷ்ணா மார்கிலிருந்து பாஜக தலைமை அலுவலகத்துகுக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
10:11 AM- அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்ந்த கிருஷ்ண மார்க் வீட்டின் முகப்பு
10:08 AM- வாஜ்பாயின் உடல் அவரது வீட்டிலிருந்து பாஜக தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் முன்னர், முப்படை அவருக்கு கடைசி முறையாக வணக்கம் வைத்த போது.