This Article is From Aug 17, 2019

அத்திவரதர் தரிசனம் நிறைவு: இன்று குளத்துக்குள் மீண்டும் செல்கிறார்!

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வந்தனர். அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.

அத்திவரதர் தரிசனம் நிறைவு: இன்று குளத்துக்குள் மீண்டும் செல்கிறார்!

கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரது சிலை இன்று கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அந்தவகையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி அளித்தார். 

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வந்தனர். அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. வெளியூரில் இருந்த வந்த பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள். 

கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால், நேற்று சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

கடைசி நாள் என்பதால், நேற்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, இன்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்கியது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.

பின்னர், இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும்.

இதையடுத்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு, 2059-ம் ஆண்டு மீண்டும் அத்திரவரதர் மீண்டும் காட்சியளிப்பார் என்று கூறப்படுகிறது. 
 

.