கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
Chennai: காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின்போது பக்தர்கள் உயிரிழப்புக்கு நெரிசல் காரணம் அல்ல என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் கடந்த 1-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து நாள்தோறும் தரிசனம் செய்கின்றனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 12-ம்தேதி இங்கு தரிசனம் செய்தார். இதேபோன்று பிரபலங்கள் பலரும் அத்திவரதரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தரிசனத்தின்போது பக்தர்கள் 4 பேர் மூச்சுத திணறி உயிரிழந்தனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் எழுப்பினார். அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதனை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திரு ஓண நட்சத்திரம் என்பதால் மாலை 4 மணி வரையில் 1.70 லட்சம்பேர் அத்தி வரதரை தரிசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச்சரியாக செய்யப்பட்டிருந்தன. முன்னதாக வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டிருந்தார் என்று கூறினார்.
NDTVக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில், நெரிசலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. உயிரிழந்த 4 பேரில் மூவர் தரிசனம் முடித்துச் சென்ற பின்னர்தான் உயிரிழந்தார். ஒரேயொரு பெண் மட்டும் கோயிலுக்குள் உயிரிழந்தார். அதற்கு காரணம் அவர் நீண்ட நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததுதான். உயிரிழந்த மற்றவர்களில் ஒருவருக்கு இதய பாதிப்பு இருந்தது. இன்னொருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக அறிவித்துள்ளது.