“நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுத்தால் தேர்தலில் இருந்து விலகத் தயார்” - கம்பீர்
New Delhi: ஆம் ஆத்மி கட்சி சார்பில், கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் அதிஷி. இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து, “கவுதம் கம்பீர் என்னைப் பற்றி தரக்குறைவான வகையில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்துள்ளார்” என்று சொல்லி கதறி அழுதுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் இன்னாள் பாஜக கிழக்கு டெல்லி வேட்பாளருமான கம்பீர், “நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுத்தால் தேர்தலில் இருந்து விலகத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதலவர் மணிஷ் சிசோடியா முன்னிலையில் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அதிஷி. அப்போது, தன்னைப் பற்றி பாலியல் ரீதியாக தரக்குறைவான வகையில் கம்பீர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறிய அதிஷி, “கம்பீருக்கு ஒரேயொரு கேள்விதான். ஒரேயொரு பெண்ணுக்கு எதிராக கம்பீர் இப்படி செய்ய முடியும் என்றால், கிழக்கு டெல்லியில் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் நிலைமை என்னவாகும்” என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இப்படிப்பட்டவர்கள் பதவிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கும். அதிஷி, தைரியமாக இருங்கள். இது உங்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் போன்றவர்களுக்கு எதிராகத்தான் நாம் போராட வேண்டும்” என்று கருத்து கூறியுள்ளார்.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள கம்பீர், ட்விட்டர் மூலம், “நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப்பட்டால், எனது வேட்பு மனுவை இப்போதே வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். அப்படியில்லை என்றால், அரசியலில் இருந்து விலக நீங்கள் தயாரா” என்று கேட்டுள்ளார்.
ட்விட்டரில் பல அதிரடி அரசியல் கருத்துகளை கூறி வந்த கவுதம் கம்பீர், சென்ற மாதம் அதிகாரபூர்வமாக பாஜக-வில் இணைந்தார். கிழக்கு டெல்லியில் இருந்து அவர் இந்த முறை போட்டியிடுகிறார்.