This Article is From Mar 04, 2020

செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: அமைச்சரை சாடும் மு.க.ஸ்டாலின்!

எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் - "அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்" என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?

செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: அமைச்சரை சாடும் மு.க.ஸ்டாலின்!

அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?

ஹைலைட்ஸ்

  • அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது தாக்குதல்
  • செய்தியாளருக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும்
  • ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, வன்முறையையும் கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும், பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் - மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. 

அதன் கொடூர அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகைச் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மோதல்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுள்ள நிலையில், அதன் செய்தியாளர் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏற்கனவே மதரீதியான வன்முறை - வெறுப்பு வார்த்தைகளை மேடைகள்தோறும் வெளிப்படுத்தி வருவதுடன், திமுகவினர் மீது தாக்குதல் நடத்துவேன் என தடித்த வார்த்தைகளையும் எவ்விதக் கூச்சமும் அச்சமுமின்றிப் பயன்படுத்தி வருகிறார். 

எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் - "அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்" என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?

இதற்கு, இந்த முற்றிப்போன நிலையிலாவது, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.