ஹர்ஜீத் சிங்கின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை மருத்துவர்கள் வெற்றிகரமாக இணைத்தனர்
New Delhi: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காய்கறி மார்கெட் அருகே நேற்று அம்மாநில காவல்துறையைச் சார்ந்த துணை ஆய்வாளரின் கை நிகாங் என்கிற ஆயுதமேந்திய மதக்குழுவினரால் துண்டிக்கப்பட்டது. மருத்துவர்களின் ஏழரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது கை மீண்டும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கையை (LOCKDOWN) பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவித்திருந்தார். இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருந்தன. இந்த நிலையில் பஞ்சாபில் ஊரடங்கு அமலில் இருக்கும்பட்சத்தில் நேற்று அதிகாலை 6 மணியளவில் நிகாங் மத குழுவை சார்ந்தவர்களை ஏற்றிவந்த வாகனம் ஒன்று சாலை தடுப்புகளில் மோதியுள்ளது. மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கக்கூடிய காலகட்டங்களில் இவ்வாறு கூட்டமாகப் பயணிப்பது குறித்து காவல்துறையின் எச்சரித்து உள்ளனர். அப்போது எழுந்த சர்ச்சையில் நிகாங் குழுவினர் காவல்துறையினர் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் ஹர்ஜீத் சிங் என்ற காவல் துணை ஆய்வாளரின் கை துண்டாக்கப்பட்டது. என பஞ்சாப் காவல்துறைத் தலைவர் தின்கர் குப்தா என்.டி.டி.வி-யிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான துணை ஆய்வாளருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் குழுவின் கடினமான முயற்சிக்கு நன்றி கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங். மேலும், துணை ஆய்வாளர் விரைவில் நலம்பெற விரும்புவதாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
பஞ்சாப் காவல்துறைத் தலைவர் தின்கர் குப்தாவும், ஹர்ஜீத் சிங் நன்றாக குணமடைந்து வருவதாக ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் சர்வதேச அளவில் வேகமெடுத்ததைத் தொடர்ந்து பஞ்சாபிற்கு ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பினர். இதனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு மே 1 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.