This Article is From Feb 21, 2020

கேலிக்குள்ளான மகன்: கண்ணீருடன் தாய் எழுப்பிய பாசப்போராட்டம்! - வீடியோ!

சக மாணவர் ஒருவர் தலையில் தட்டுவதையும், உயரம் குறித்து கேலி செய்வதையும் தான் பார்த்ததாக 9 வயது சிறுவனான குவாடனின் தாயார் தெரிவித்துள்ளார்.

கேலிக்குள்ளான மகன்: கண்ணீருடன் தாய் எழுப்பிய பாசப்போராட்டம்! - வீடியோ!

பள்ளியில் தான் கேலிக்குள்ளானதை 9 வயது சிறுவனான, குவாடனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது உருவத்தால், தொடர்ச்சியாகக் கேலிக்குள்ளான சிறுவன் ஒருவன் தனது தாயிடம் கண்ணீருடன் தான் தற்கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார்.. மனதைக் கனக்க வைக்கும் இந்த சம்பவத்தை அந்த சிறுவனின் தாய் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், கேலி செய்வதின் விளைவு என்ன என்பதையும், அதனால் ஏற்படும் மன உளைச்சல் பற்றியும் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறார். 

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பென் பகுதியில் வசிக்கும் யாராகா பெல்லிஸ் என்ற பெண் தனது, 9 வயது சிறுவனான குவாடனை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற போது நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முகநூலில் உள்ள அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் இருக்கும் சிறுவன் குவாடன், கண்ணீருடன் ”எனக்குக் கயிறு கொடுங்கள், நான் சாக வேண்டும்” என்கிறான். 

சுமார் 6:46 நிமிடங்கள் செல்லும் அந்த வீடியோவில், சிறுவன் குவாடன், “என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்த வேண்டும்போல் இருக்கிறது. யாராவது என்னைக் கொல்ல வேண்டும் என விரும்புகிறேன்” என்கிறான்.

அப்போது வீடியோவில் பேசும் குவாடனின் தாயார் யாராகா, பள்ளியிலிருந்து எனது மகனை அழைத்து வரச் சென்ற போது, அவன் கேலிக்குள்ளான ஒரு சம்பவத்தைப் பார்க்க நேர்ந்தது. இதனால், ஏற்படும் விளைவை நான் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் என்கிறார். 

குவாடன் என்னிடம் தான் கையறு நிலையில் ஆறுதலுக்கு யாரும் இல்லாமல் தவிக்கிறேன் என்கிறான். நான் பள்ளிக்குள் வந்த போது, சக மாணவர் ஒருவர் குவாடனின் தலையில் தட்டுவதையும், உயரம் குறித்து கேலி செய்வதையும் நான் பார்த்தேன். அப்போது, எதிரில் நான் இருப்பதைப் பார்த்த குவாடன் செய்வதறியாது வேகமாக காரில் சென்று அமர்ந்தான். நான் பள்ளியில் இதனை பெரிதுபடுத்த அவன் விரும்பவில்லை. இதனைப் பார்த்த நான் ஒரு பெற்றோராகத் தோல்வியடைந்ததாக உணர்கிறேன்.. தற்போதைய கல்விமுறை தோல்வியற்றதாக உணர்கிறேன்.

இதனைப் பார்க்கும் சக பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் தயவுசெய்து குழந்தைகளுக்குக் கேலி செய்வதின் பின்னால் உள்ள தீவிரத்தை உணர வையுங்கள்.. எனது மகனைப் போல் நாளை யாருக்கும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்கிறார்.

ஒரு ஒன்பது வயது சிறுவன் பள்ளிக்குச் சென்று கற்று, சந்தோசமாக இருக்க வேண்டிய இடத்தில், சக மாணவர்கள் கேலி செய்ததன் விளைவு சிறுவனைத் தற்கொலை செய்யும் எண்ணத்திற்குத் தள்ளுகிறது. ஒவ்வொரு நாளும் மோசமாக எதாவது நடக்கிறது. 

இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காதபடி பள்ளிக்குள்ளேயே இயலாமை விழிப்புணர்வை ஏற்படுத்த மற்ற பெற்றோர்கள் அல்லது குடும்பங்கள் செய்த அறிவுரைகள் அல்லது ஏதேனும் ஆதரவு அல்லது ஏதாவது உள்ளதா? "என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இது ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை அனைவருக்கு நான் உணர்த்த விரும்புகிறேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதனைப் புரிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்கிறார். 

இந்த வீடியோவை பார்த்த பலரும் சிறுவன் குவாடனுக்கு தங்கள் ஆறுதல்களையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 15 மில்லியன் பயனர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும், 2.85 லட்சம் பேர் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

.