2015-ல் இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்துள்ளது.
Sydney: பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளில் பணிக்கு சேர்வதற்காக, அந்நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை 13 வது சிறுவன் ஹேக் செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் கவனத்தை பெறுவதற்காக இதனை செய்தேன் என்று சிறுவன் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அடிலாய்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 2015-ல்தான் இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்துள்ளது. அப்போது 13 வயதே ஆகியிருந்த சிறுவன், ஆப்பிள் கம்ப்யூட்டர்களை தனது அபார திறமையால் ஹேக் செய்து, நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த குற்றச் செயலை ஒப்புக் கொண்ட சிறுவன் தானும், மேல்போர்னை சேர்ந்த இன்னொரு சிறுவனும் சேர்ந்து ஹேக்கிங் செய்ததாக கூறியுள்ளார். கடைசியில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.
அடிலாய்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்களிஞர் மாக் ட்விக்கிஸ், 'எனது கட்சிக்காரர் ஹேக்கிங் செய்தபோது அவருக்கு வயது 13 மட்டுமே. அந்த வயதில், விபரீதம் ஏதும் தெரியாமல் இந்த வேலையை செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் வேலை பெறவேண்டும் என்ற நோக்கத்தை தவிர்த்து அவருக்கு வேறு எந்த தீய நோக்கமும் இல்லை' என்று நீதிமன்றத்தில் வாதாடினார்.
மேலும் ஐரோப்பாவில் இதுபோன்ற ஹேக்கிங் சம்பவம் நடந்தபோது அதனை செய்தவரை ஆப்பிள் நிறுவனம் பணிக்கு எடுத்துக் கொண்டதை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் ஒய்ட், சிறுவனுக்கு 500 டாலரை அபராதமாக விதித்ததார். இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படவில்லை.
முன்னதாக தனது கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது குறித்து அமெரிக்க விசாரணை நிறுவனமான எஃப்.பி.ஐ.-யில் ஆப்பிள் புகார் செய்திருந்தது. பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆஸ்திரேலிய போலீசை தொடர்பு கொண்ட எஃப்.பி.ஐ. சிறுவனை பிடித்தது.