அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 15 குற்றவாளிகள் மீதான தண்டனையை போக்சோ நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டேர் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இதுதொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2018 டிசம்பர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குறுக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதில், அரசு தரப்பு சாட்சியாக 36 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 120 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இதை வைத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 11 மாதங்களாக நடந்து வந்தது.
இந்தநிலையில், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, இருதரப்பு வாதங்கள் என அனைத்தும் கடந்த டிசம்பர் 6ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து 17 பேரில் ஒருவர் உயிரிழந்து விட்டதால், 16 பேர் மீது நேற்று முன்தினம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார்.
அதில், 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், குடியிருப்பில் தோட்டக்காரராக வேலை செய்து வந்த குணசோகரன் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
மேலும் 15 பேருக்கு என்ன தண்டனை என்ற விபரங்களை 3ம் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார். குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது இன்று தெரியவரும், இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.