அயோத்தி வழக்கின் தீர்ப்பை இந்தியாவே எதிர்பார்த்துள்ளது.
New Delhi: முஸ்லிம்கள் எந்த மசூதியிலும் தொழுகை நடத்திக் கொள்ளலாம், ஆனால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது என்று அயோத்தி வழக்கில் ராம் லல்லா விராஜ்மாரி தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டப்பட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தவர்களில் ஒருவர் ஆவார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ராம் லல்லா அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இன்று வாதிட்டார். அவர் வாதிடுகையில், 'முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது என்பது ஒரு வரலாற்றுப் பிழை. அதனை சரி செய்ய வேண்டும்.' என்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அளித்த தகவலின்படி நாளையுடன் அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து விடும் என்று தெரிகிறது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை இந்தியாவே எதிர்பார்த்துள்ளது.