தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
New Delhi: அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அக்குழுவுக்கு தனது அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்குள் அயோத்தி வழக்கை முடிக்க திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று இந்த வழக்கை மேற்கொள்வதற்கான கால அட்டவணையை வலியுறுத்தினார். அது இல்லாமல், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அதன் வரலாற்று தீர்ப்பை தயாரிக்க நேரம் குறைவாக இருக்கும்.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானிடம் அனைத்து ஆலோசகர்களையும் கலந்தாலோசித்த பின்னர் அட்டவணையைத் தயாரிப்பதில் முன்னிலை வகிக்குமாறு ரஞ்சன் கோகாய் கேட்டுக்கொண்டார்.
வாதங்கள் எப்போது முடியும் என்று தெரிந்தால்தான் எங்களுக்கு தீர்ப்பு எழுதுவதற்கு எத்தனை நாட்கள் கிடைக்கும் என்பது தெரியவரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சம்மந்தப்பட்ட தரப்புகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறே செய்யலாம் என்றும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறி உள்ளது.