2.7 ஏக்கர் அளவிலான நிலம் சர்ச்சைக்குரிய வகையில் இருந்து வருகிறது. இந்த இடத்திற்குத்தான் 2 தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Lucknow: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கை ஜனவரி 29-ம்தேதி விசாரிக்கும் என அறிவித்துள்ளது. இந்த வழக்கு 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகளில் ஒருவராக இருந்த நீதிபதி யு.யு. லலித் தான் இந்த வழக்கில் வழக்கறிஞராக செயல்பட்டதை சுட்டிக்காட்டி தன்னை இந்த அமர்வில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கு ஜனவரி 29-ம் தேதி விசாரிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை தவிர்த்து எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரா சூட் ஆகியோர் நீதிபதிகளாக உள்ளனர். கடந்த 3-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது அதனை விசாரிக்கும் தேதி ஜனவரி 10-ஆன இன்றைக்கு முடிவு செய்யப்படும் என அன்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 29-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. பாபர் மசூதி 1992, டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே தற்போது பிரச்னை எழுந்திருக்கும் 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.
2010-ம் ஆண்டின்போது தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்னைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான் என்றும் அதன் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மீதமுள்ள இடம் சன்னி சென்ட்ரல் வக்ப் வாரியத்திற்கு சென்று விடும். இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.
அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய உத்தர பிரதேச அரசு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அவசர சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகளும், பாஜகவில் ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வலதுசாரி அமைப்புகள், சிவசேனா உள்ளிட்டவை நெருக்கடி கொடுத்தாலும், சட்ட ரீதியில் அயோத்தி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அயோத்தி பிரச்னைக்கு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. தாமதமான நீதி அநீதிக்கு சமம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி வலதுசாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கலவரங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.