2.7 ஏக்கர் நிலத்தில் தற்போது வில்லங்கம் இருந்து வருகிறது.
New Delhi: அயோத்தி வழக்கு விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான முடிவை உச்ச நீதிமன்றம் நாளை தெரிவிக்க உள்ளது. இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர்களை நியமிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் நாளை தனது நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், ‘ராம ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் என்பது நிலத்தைப் பொறுத்தது அல்ல நம்பிக்கையைப் பொறுத்தது' என்று கருத்து தெரிவித்தது.
வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.ஏ.போப்ட், ‘யாரும் எங்களுக்கு வரலாறு குறித்து தெரிவிக்க வேண்டாம். எங்களுக்கு அது பற்றி நன்றாகவே தெரியும். கடந்த காலத்தில் நடந்தது நம் கட்டுப்பாட்டில் இல்லை. யார் படையெடுத்தது, பாபர் என்ன செய்தார், யார் அப்போது ராஜாவாக இருந்தார், அப்போது மசூதி அல்லது கோயில் இருந்ததா என்பதெல்லாம் இப்போது பேச வேண்டாம்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் ஒரு மனுதாரரான இந்து மகாசபா, ‘பொது மக்கள் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பமாட்டார்கள்' என்றதற்கு நீதிமன்றம், ‘ஆரம்பிப்பதற்கு முன்னரே அது குறித்து ஒரு முன் முடிவு வேண்டாம்' என்று பதில் அளித்திருந்தது.
வழக்கில் முஸ்லிம் தரப்பு, ‘இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை என்பது பொதுத் தளத்தில் நடத்தப்படக் கூடாது. அது ரகசியமாக இருக்க வேண்டும்' என்று வாதிட்டது.
பாபர் மசூதி 1992, டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே தற்போது பிரச்னை எழுந்திருக்கும் 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.
2010-ம் ஆண்டின்போது தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்னைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான் என்றும் அதன் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
மீதமுள்ள இடம் சன்னி சென்ட்ரல் வக்ப் வாரியத்திற்கு சென்று விடும் என்றும் கூறியது. இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.
அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய உத்தர பிரதேச அரசு, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அவசர சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகளும், பாஜகவில் ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் ராமர் கோயில் வழக்கு மீது விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி வலதுசாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கலவரங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.