Ayodhya Case - சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது.
New Delhi: அயோத்தி வழக்கின் (Ayodhya Case) மனுதாரர்களில் ஒன்றான Sunni Central Waqf பிரிவு, இன்று வெளியான தீர்ப்பில் அதிருப்தி தெரிவித்துள்ளது. தற்போது வந்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் வக்ப் குழு கூறியுள்ளது.
“இந்த தீர்ப்பு நியாயமற்றது என்று நினைக்கிறோம். இதை நீதியாக எங்களால் ஏற்க முடியாது. அதே நேரத்தில் தீர்ப்பு மொத்தத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை,” என்று வக்ப் குழுவின் வழக்கறிஞர் ஜபர்யாப் ஜிலானி கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது.
இதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
“மொத்த நிலத்தையும் மாற்று தரப்பினருக்குக் கொடுத்துள்ளது நியாயமற்றது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறோம். அதே நேரத்தில் தீர்ப்பு குறித்து விமர்சனம் வைக்க எங்களுக்கு உரிமையுள்ளது. பல வழக்குகளில் நீதிமன்றம், தீர்ப்பை மாற்றி கூறியுள்ளது. ஆகவே, இந்த தீர்ப்பையும் சீராய்வு செய்ய எங்களுக்கு உரிமையுள்ளது,” என்று விளக்கம் கொடுத்துள்ளார் ஜிலானி.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ல் வலது சாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 1980-களில் இருந்தே அயோத்தி பிரச்னை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்கு பிரச்னை நீடித்திருந்தது.
அயோத்தி வழக்கு தொடர்பாக 2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கியது. இதன்படி, சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தொடர்ந்து 40 நாட்களாக அயோத்தி வழக்கை விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, சந்திரா சூட், அசோக்பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.