ராமர் கோவில் பூமி பூஜைக்காக 29 வருடங்களுக்கு பின்பு அயோத்தி திரும்பிய பிரதமர் மோடி!
Ayodhya/ New Delhi: ராமர் கோவில் பூமி பூஜைக்காக 29 வருடங்களுக்கு பின்பு பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி வருகை தந்துள்ளார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து, 29 வருடங்களுக்கு பின்பு இன்று அயோத்தி வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அனுமன்ஹார்கி, ராம்லல்லா உள்ளிட்ட தளங்களில் பிரார்த்தனை மேற்கொண்டார். இதன் பின்னர் பிரம்மாண்ட ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த ராமர் கோவில் பூமி பூஜை பிரதமர் மோடிக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக, ராமர் கோவிலை கட்ட வேண்டும் என 1990களில் நாடு முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார். ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது பாஜகவின் சித்தாந்தமாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாகவும் இருந்தது.
லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்த பிரதமர் மோடி, தங்க பட்டு குர்தா அணிந்திருந்தார். பூமி பூஜைக்கு செல்வதற்கு முன்பு, முதலில் அனுமன்ஹார்கி சென்ற அவர் அனுமனை வழிபட்டார். தொடர்ந்து, ராமரின் பிறப்பிடமான ராம்லல்லா சென்று தரிசனம் மேற்கொண்டார்.
அனுமன்ஹார்கியில் பிரதமர் மோடிக்கு தலைமை குருக்கள் தலைக்கவசம் பரிசளித்தார். தொடர்ந்து, குருக்கள் பூசாரி ராஜூ தாஸ் கூறும்போது, புராணத்தின் படி, இறைவன் அனுமனின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்த வேலையும் முடிவதில்லை என்று கூறினார்.
இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உள்ளிட்ட 170 ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோன வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்கள்.