மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
New Delhi: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் கோயில் கட்டவும், அதற்காக 3 மாதத்திற்குள் அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வை, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது
விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.
அந்த குழு சம்பந்தபட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். எனினும், முடிவு எட்டப்பவில்லை. இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
நேற்று மாலை வரை தீர்ப்பு எப்போது வெளிவரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. எனினும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஒய்வு பெறும் நவ.17ம் தேதிக்கு முன்பாக இருக்கும் என்று மட்டும் பரவலாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். சன்னி பிரிவுக்கு ஷியா வக்ப் வாரியம் தொடர்ந்து மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி, பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்றும், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.
2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.