அயோத்தியில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட அளவு நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது.
Ayodhya: அயோத்தி வழக்கின் தீர்ப்புப் படி, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கு அங்குதான் 5 ஏக்கர் நிலம் வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தின் முன் மொழிதலை (Offer) நிராகரிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் அடுத்த சர்ச்சை வெடிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வழக்குத் தொடர்ந்த முஸ்லிம்கள் தரப்புக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்குத் தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, 5 ஏக்கர் நிலம் குறித்து கூறுகையில், 'மத்திய அரசு எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தருவதாக இருந்தால் அதனை ஏற்கனவே கையகப்படுத்திய 67 ஏக்கருக்குள் வாங்க வேண்டும். அப்படி செய்தால் நிலத்தை ஏற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால், எங்களுக்கு இந்த நிலமே வேண்டாம்.' என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
இதேபோன்று உள்ளூர் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான மவுலானா ஜலால் அஷ்ரப் கூறுகையில், 'முஸ்லிம்களால் சொந்தமாக நிலம் வாங்கி அங்கு மசூதி கட்ட முடியும். இதற்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை. தீர்ப்பின்படி அரசு நிலம் தருவதாக இருந்தால் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபி காசி குத்வா மற்றும் பல ஞானிகள் தர்கா இருக்கக்கூடியதும், மத்திய அரசு ஏற்கனவே கையகப்படுத்தியதுமான 67 ஏக்கர் நிலத்துக்குள் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்' என்றார்.
இதேபோன்ற கருத்தை முஸ்லிம் மதத்தை சேர்ந்த பல தலைவர்கள் வலியுறத்தி வருகின்றனர். ஆனால் தீர்ப்பின்படி 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் தரப்புக்கு வழங்க வேறொரு இடத்தை உத்தரப்பிரதேச அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.