நாளை காலை 11 மணி வரையில் மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
Mumbai: அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் எதிரொலியாக மும்பையில் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 60 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் ஏற்படலாம் என்ற அச்சத்தின்பேரில், பதற்றம் நிறைந்த இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இன்டர்நெட் சேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பையில் மட்டும் 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மும்பை கமிஷனர் பிரணாய அசோக் கூறுகையில், 'அமைதியை சீர்குலைக்க சில சமூக விரோத சக்திகள் முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
144 தடை உத்தரவுப்படி, சனிக்கிழமையான இன்று காலை 11 மணி முதல் நாளை காலை 11 மணி வரையில் மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கும். இதன்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது, வாகனங்களில் செல்வது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.
அயோத்தி தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று வழங்கப்பட்ட அயோத்தி வழக்கு தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அறக்கட்டளையை அரசு தொடங்க வேண்டும் என்றும், 3 மாதத்திற்குள் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் தரப்பின் சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.