அயோத்யா என்பது நமது அடையாளம். அது நமது பெருமை, ஆதித்யநாத்
Lucknow: அயோத்யாவில் கண்டிப்பாக ராமர் சிலை நிறுவப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று அயோத்யாவில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதித்யநாத், ‘இங்கு ஒரு ராமர் சிலை நிறுவப்படும். அந்த சிலை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். கண்டிப்பாக ராமர் சிலை உத்தர பிரதேசத்தின் ஒரு அடையாளமாக மாறும்.
அந்த சிலை வெட்ட வெளியில் நிறுவப்படாது. ஒரு கோயிலுக்குள் வைக்கப்படும். அது மிக பிரமாண்டமானதாகவும் இருக்கும்' என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் ராமர் கோயில் கட்டுவது குறித்து பேசினார், ‘அயோத்யாவில் ராமருக்குக் கோயில் இருந்தது. மீண்டும் இங்கு ஒரு கோயில் கட்டப்படும். ஆனால் எது நடந்தாலும் அது அரசியல் சட்ட சாசனத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கும்' என்று தகவல் தெரிவித்தார்.
சென்ற ஆண்டே, ராமர் சிலை நிறுவுவது குறித்து முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். ஆனால், அது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் அது குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று அயோத்யாவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கெடுத்த ஆதித்யநாத், ‘அயோத்யா என்பது நமது அடையாளம். அது நமது பெருமை. கடவுள் ராமரின் அடையாளத்தை அது சுமந்து நிற்கிறது. எனவே அவரின் பெருமை என்றென்றும் நிலை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றிலிருந்து ஃபயிஸாபாத் அயோத்யாவாக அழைக்கப்படும்' என்று பேசினார்.
யோதி ஆதித்யநாத் தனது உரையில், ராமரின் தந்தையான ராஜா தஷரத்தின் பெயர், மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு சூட்டப்படும் என்றும், அயோத்யாவில் இருக்கும் விமானநிலையம் ராமரின் பெயருக்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றி உத்தரவு பிறப்பித்தார் ஆதித்யநாத். இந்நிலையில் அயோத்யா பெயர் மாற்றம் குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.