'இதற்காக இருநாட்டு விஞ்ஞானிகளும் தங்களுடைய ஆய்வுகளையும், சோதனை முடிவுகளையும் பரிமாறி வருகிறார்கள்.'
Washington: இந்தியாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வாளர்களும் ஒன்று சேர்ந்து கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, இந்திய ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் ஒன்றிணைந்த வீடியோ கான்பிரன்ஸிங் நேற்று நடந்தது. இதில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ஆயுர்வேதத்தில் உள்ள மருந்து கண்டுபிடிப்புகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண் ஜித் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக இரு நாடுகளிலும் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து கொரோனாவை தடுப்பதற்கான பரிசோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக இருநாட்டு விஞ்ஞானிகளும் தங்களுடைய ஆய்வுகளையும், சோதனை முடிவுகளையும் பரிமாறி வருகிறார்கள்.
IUSSTF எனப்படும் இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப மன்றம் எப்போதும் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருவதால், அதற்கான தடுப்பு மருந்தை அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டுபிடிக்கலாம் என்று இந்திய, அமெரிக்க ஆயுர்வேத நிபுணர்களை IUSSTF கேட்டுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து எண்ணற்ற வழிமொழிகள், ஆய்வுகள், ஆலோசனைகள் இருநாடுகளும் பரிமாறிக்கொண்டன. அமெரிக்காவின் ஆய்வுகளை இந்தியாவும், இந்தியாவின் ஆய்வுகளை அமெரிக்காவும் மதிப்பாய்வு செய்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், குறைந்த விலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிறந்த நாடாக திகழ்கிறது. மேலும், கொரோனாவை ஒழிக்கும் பணியிலும் இந்தியா மிகமுக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா கல்வி நிறுவனங்களுக்கும், இந்தியாவிலுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே ஆய்வு தொடர்பாக குறைந்தது மூன்று ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தால் கிடைக்கும் பலன் வெறும் அமெரிக்கா, இந்தியாவோடு நின்று விடாது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் பலனளிக்கும்.
அது மட்டுமல்ல பல முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களும், புதிதாகத் தொடங்கிய நிறுவனங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சரியான பாதையில் முன்னேறி வருகின்றன. மற்ற டிஜிட்டல் தளங்களைப் போலவே டெலிமெடிசின், டெலிஹெல்த் மருத்துவத் துறைகளும் இனி மாறும்.
சுகாதாரத்துறையைப் பொறுத்தவரையில் இந்தியாவும், அமெரிக்காவும் நெடுங்காலமாக ஒத்துழைத்தும், நட்பு பாராட்டியும் வருகிறது. குறிப்பாக கொரோனா போன்ற முக்கிய நோய்த் தொற்றை புரிந்து கொள்ளவதற்கு இருநாடுகளும் பல்வேறு திட்டங்களில் ஒன்றிணைந்து செயல்படுகிறது' என விளக்கினார்.
முன்னதாக நேற்று நடந்த வீடியோ கான்பிரன்ஸிங் கூட்டத்தில், ஓக்லஹோமா மாகாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விஜய் குச்ரூ, ஹார்வர்ட் மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் சாமுவேல், புற்றுநோய் மையத்தின் சிறுநீரக நோய் பேராசிரியர் ஆஷிஷ், சாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பயோ இன்ஜினியரிங் துறை பேராசிரியர் மனு பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.