இன்று கேரளாவின் பதனம்திட்டா மாவட்டத்தில் 12 மணிநேரம் கடையடைப்பிற்கு பாஜக அழைப்பு விடுத்தது.
New Delhi: கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டத்தில் 60 வயது ஐயப்ப பக்தர் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 12 மணிநேர கடையடைப்பிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த மாதம் சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் சிவதாசன் உயிரிழந்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது வதந்தி என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பந்தலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அக்.25-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர். அவரது உடல் நேற்று போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் தாக்குதல் நடத்திய பகுதியிலிருந்து வெகு தொலைவில் கிடைத்ததாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவதாசனின் குடும்பத்தார் அளித்துள்ள புகாரில், அக்.18ஆம் தேதி அவர் சபரிமலைக்கு சென்றுள்ளார். மறுநாள் கோயில் பூஜை முடிந்த பின் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் அளித்துள்ளார். போலீசார் அக்.16 மற்றும் 17 -ம் தேதிகளில் தான் போராட்டக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அக்.19 ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவரின் போனிலிருந்து தமது குடும்பத்தை தொடர்பு கொண்ட சிவதாசன் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார்.
இதுதான் உண்மை என்று பதனம்திட்டா பகுதி தலைமை காவல் அதிகாரி டி.நாராயணன் கூறியுள்ளார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கடந்த மாதம் ஒன்பது பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர்.
ஆனால் அவர்கள் முயற்சியை போராட்டகாரர்கள் தோற்கடித்தனர். மீண்டும் வரும் ஐந்தாம் தேதி கோவில் திறக்கப்படும் என்பதால், சபரிமலையை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.