அசாம் கானுக்கு எதிராக பல பெண் அரசியல்வாதிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்
சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசாம் கான், சில நாட்களுக்கு முன்னர் துணை சபாநாயகர் ரமா தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று அவர் மக்களவையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வியாழக் கிழமை, முத்தலாக் மசோதா குறித்தான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சமாஜ்வாடி கட்சி சார்பில் உரையாற்றினார் அசாம் கான். அந்த நேரத்தில்தான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் கான். அவரது பேச்சு மிகவும் தரைக்குறைவாக இருந்ததாகக் கூறி, நாடாளுமன்றக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரமா தேவி, “அசாம் கானின் பேச்சு இந்தியாவில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களைக் காயப்படுத்தியுள்ளது. இது அவருக்குப் புரியவே புரியாது. மிகவும் கீழ்த்தரமான சில விஷயங்கள் அவரிடம் உள்ளன. நாடாளுமன்றத்துக்கு வந்தது அதைப் போன்ற விஷயங்களைக் கேட்பதற்கு அல்ல” என்று கொதித்தார்.
இந்நிலையில்தான் அசாம் கான், “சகோதரி, நான் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்டவன். எனவே, எதையும் தவறாக என்னால் சொல்ல முடியாது. நான் கூறியதில் நாடாளுமன்ற நடைமுறைக்கு எதிராக ஏதேனும் இருந்தால் இப்போதே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால், அசாம் கானுக்கு எதிராக பல பெண் அரசியல்வாதிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக-வின் சுஷ்மா சுவராஜ், “அனைத்து விதங்களிலும் கீழ்த்தரமான நிலையை அடைந்துவிட்டார் அசாம் கான்” என்றார்.
“இது ஏற்றுக் கொள்ள முடியாத பேச்சு. மிகவும் கறாரான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார்.