மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஹைலைட்ஸ்
- 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் கலவரம் நடந்தது
- பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மீது குற்றச்சாட்டு
- வழக்கை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 31-ம்தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பை வழங்குவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம்தேதி வரைக்கும் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்தாண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
தேசிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறையில் இருப்பதால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு காலக்கொடுவை உச்ச நீதிமன்றம் நீட்டித்திருக்கிறது.
பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு வலதுசாரி செயற்பாட்டாளர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்த இடத்தில்தான் ராமர் பிறந்ததாகவும், அதன் அடையாளமாக கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும், பாபர் மசூதியை இடித்தவர்கள் குற்றம் சாட்டினர்.
மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2017 ஏப்ரல் மாதத்தின்போது, சிறப்பு நீதிமன்றம் வழக்கை 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், விசாரணை முடிவுக்கு வரவில்லை. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. யாதவ், 2019 செப்டம்பரில் ஓய்வு பெறுவதாக இருந்தார். அவரது பணிக்காலத்தை உச்ச நீதிமன்றம் நீட்டித்தது.
2017-ல் பாபர் மசூதி தொடர்பான மற்ற குற்ற வாக்குகள் உள்ளிட்டவற்றை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, விசாரணையை நாள்தோறும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.