வனத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், குழந்தை ஊர்ந்து செல்வதைப் பார்த்து, போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார்
ஹைலைட்ஸ்
- பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது
- வனத்துறை அதிகாரிதான், குழந்தை சாலையில் இருந்ததைப் பார்த்துள்ளார்
- குழந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது
Thiruvananthapuram: கடந்த சனிக்கிழமை இரவு, மலைகள் சூழ்ந்த கேரள மாவட்டமான மூனாரிலிருந்த காவல் நிலையத்துக்கு ஒரு வினோதமான அழைப்பு வந்தது. சாலையில் ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே அந்த அழைப்பின் தகவல்.
ஒரு வயதே நிரம்பியிருந்த அந்தக் குழந்தை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்திற்குள் இருந்த அனைவரும் தூங்கிவிட, குழந்தை சாலையில் தவறி விழுந்துள்ளது. காருக்கு உள்ளே இருந்தவர்கள், அசந்து தூங்கிக் கொண்டிருந்த காரணத்தால், இப்படியொரு விஷயம் நடந்ததையே உணர்ந்திருக்கவில்லை.
இந்த சம்பவத்தின் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சாலையில் விழுந்த குழந்தை, காடு நோக்கி ஊர்ந்து செல்வதும் வீடியோவில் தெரிகிறது.
வனத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், குழந்தை ஊர்ந்து செல்வதைப் பார்த்து, போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். குழந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துணை - ஆய்வாளர் சந்தோஷுக்குத் தகவல் வந்தவுடன், அக்கம் பக்கப் பகுதிகளில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் கொடுத்துள்ளார். இதே நேரத்தில் குழந்தையின் பெற்றோர்களுக்கும் நடந்த விபரீதும் குறித்துத் தெரிந்திருக்கிறது.
“எனக்கு இரவு 9:40 மணிக்கு அழைப்பு வந்தது. 10 மணிக்கெல்லாம் குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக மருத்துவ முதலுதவியை அதற்குக் கொடுத்தோம். 11 மணிக்கெல்லாம், குழந்தையின் பெற்றோர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்துப் புகார் தெரிவித்துள்ளனர். உடனே, நாங்கள் பெற்றோரைத் தொடர்பு கொண்டோம். குழந்தை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவித்தார் சந்தோஷ்.
தமிழகத்தில் உள்ள கோயிலில் பூஜைகள் முடித்துவிட்டு, குழந்தையின் குடும்பம் சொந்த ஊர் நோக்கி சென்றுள்ளது. அப்போதுதான் இச்சம்பவம் நடந்துள்ளது. காரிலிருந்து தவறிவிழுந்த குழந்தைக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் இருக்கிறார்கள்.
(With inputs from ANI)