மூன்றாம் கட்ட பரிசோதனை குழந்தை பிறந்தததில் இருந்து 18-வது மாதம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். (Representational)
Virudhunagar, Tamil Nadu:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையிடம் எந்த பாதிப்பும் இல்லை என்பது இரண்டாம் கட்ட ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜனவரி 17-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளதா என கண்டறிய மார்ச் -4 ஆம் தேதி பி.சி.ஆர் எனப்படும் சோதனை நடத்தப்பட்டது. அதில் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை மதுரை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையிலும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை குழந்தை பிறந்தததில் இருந்து 18-வது மாதம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதி என். கிருபாகரன் மற்றும் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் கொண்ட அமர்வு அப்பெண்ணுக்கு வீடும் அவருக்கு ஏற்ற வேலையும் கொடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.