This Article is From Jan 09, 2019

பதவியிழந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு மனு!

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதவியிழந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு மனு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்து ஆடுவதாகவும், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

அப்போது அரசுப்பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இதில், தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது ஓசூர் காவல்துறையினர் 147, 148, 332, 353, 434, 307 ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு ரூ.10,500 அபராதமும் விதித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், இதில் குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், இதனால், சிறை தண்டனையை நிறுத்திவைக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், தண்டனை அளிக்கப்பட்டதால், அவர் பதவியில் இருந்த ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பதவியிழந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

.