This Article is From Apr 28, 2020

'தொழிலாளர்களை பாதுகாக்க பால்கனி அரசுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்' : கமல்

தமிழக அரசும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூன் வரையில் நிறுத்தி வைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

'தொழிலாளர்களை பாதுகாக்க பால்கனி அரசுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்' : கமல்

மத்திய மாநில அரசுகளை விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

ஹைலைட்ஸ்

  • மத்திய மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளன
  • கொரோனா பாதிப்பு நடவடிக்கையாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது
  • தொழிலாளர்கள் விஷயத்தில் தெளிவான முடிவை அரசுகள் எடுக்க கமல் வலியுறுத்தல்

''தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்'' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கொரோனாவால் ஒட்டுமொத்த இந்தியாவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 

17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கொரோனா  பாதிப்பையொட்டி சிக்கன நடவடிக்கையாக அகவிலைப்படி உயர்வு ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மத்திய தொழிலாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதேபோன்று தமிழக அரசும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூன் வரையில் நிறுத்தி வைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்'' என்று கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பால்கனியில் நின்று மக்கள் கரவொலி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதேபோன்று கொரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை உலகுக்கு தெரியப்படுத்த வீட்டில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவற்றை பிரபலங்கள், தமிழகம் உள்பட சில மாநில அரசுளின் முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிறைவேற்றினர். 

இந்த நிகழ்வு முதற்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை 'பால்கனி அரசுகள்' என்று விமர்சித்து வருகிறார். 
 

.