தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஊழல் வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், புகார் சம்பந்தமான விசாரணை முடிக்கப்பட்டு, அதற்கான அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக திமுக ராஜ்யசபா எம்.பி., ஆர்.எஸ்.பாரதி சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், ‘எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது அமைச்சராக இருந்தார். தற்போது முதல்வராக இருக்கிறார். இரு பதவிகளையும் வகிக்கும் போதும், 5 சாலைத் திட்டங்களுக்கு தன் நண்பர்களின் நிறுவனங்களுக்கும் தனது பினாமி நிறுவனங்களுக்கும் சாலை போடும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். இப்படி செய்ததன் மூலம் பழனிசாமி, அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஜூன் 13 அன்றே புகார் அளித்த போதும், இதுவரை சரிவர விசாரணை மேற்கொள்ளப்படவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘புகார் சம்பந்தமான விசாரணை முடிக்கப்பட்டு, அதற்கான அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியே விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டுவிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் தான் இனி பதிலளிக்க வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பதில் மனுவை பரிசீலிக்க சில நாட்கள் அவகாசம் தேவை’ என்றார். ஆகவே வழக்கு விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)