கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், விதிமீறல் பேனர்களை தடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, அரசியல் கட்சியினர் சாலைகளில் விதிகளுக்கு புறம்பாக பேனர்கள் வைக்க தடை விதிப்பதாகவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவிதமான பேனர்களும் தமிழகம் முழுவதும் வைக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரி அதிமுக முன்னாள் எம்.பி. பாலகங்கா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.
எனவே அந்த நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க அதிமுகவினருக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், இது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு, பாகங்காவில் மனுவை நிராகரித்து, அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.