மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கேபிள் மற்றும் டிடிஎச் சேவை குறித்து அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணமாக 155 ரூபாயில் பெறலாம் என்றும் அதற்கு மேல் கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் பிப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டிராயின் இந்த புதிய விதிமுறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கேபிள் ஆபரேட்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் செயல்படுகிறது என்று கூறி கேபிள் ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த புதிய கேபிள் டிவி கட்டண திட்டத்தை எதிர்த்து 80 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், புதிய திட்டத்தால் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வருமானம் பெருமளவு பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேவைப்படும் சேனல்களின் பட்டியலை தர வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவிக்காததால் புதிய கட்டண திட்டத்திற்கு அவர்களை மாற்றுவது உடனடியாக சாத்தியமில்லை என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், கட்டண உயர்வு திட்டத்திற்கு பிப்ரவரி 18ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 134ம் தேதி, இதுகுறித்து டிராய் பதிலளிக்க வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.