சர்வதேச விமானங்களுக்கு மார்ச் 31-ம்தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஹைலைட்ஸ்
- முதலில் மார்ச் 31-ம்தேதி வரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
- தற்போது ஏப்ரல் 14 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
- 21 நாட்கள் ஊரடங்கை கவனத்தில் கொண்டு தடை நீட்டிப்பு
New Delhi: இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக மார்ச் 31-ம்தேதி வரைக்கும் சர்வதேச விமானங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை தடை விதித்திருந்தது. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள தடை நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மார்ச் 31-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா வைரஸால் இந்தியாவில் 600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் நாட்டில் பஸ், விமானம், ரயில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் விமானப் போக்குவரத்து துறையை கொரோனா கடுமையாக பாதித்துள்ளது. அதே நேரத்தின் விமானப் போக்குவரத்துதான் உலகம் முழுவதும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் என்ற மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உருவானது. தற்போது உலகம் முழுவதும் இதனால் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 20 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.