This Article is From Aug 04, 2018

‘ஹீலர்’ பாஸ்கரின் அமைப்புக்குத் தடை..!

திருப்பூரில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணுக்கு, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்

‘ஹீலர்’ பாஸ்கரின் அமைப்புக்குத் தடை..!

வீட்டிலேயே சுகப் பிரசவம் பார்த்துக் கொள்ள பயிற்சி அளிப்பதாக தனியார் அமைப்பு ஒன்று கோயம்புத்தூரில் விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் ஹீலர் பாஸ்கர் போலீஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் தெரபி அமைப்பான ‘அனடோமிக் தெரபி ஃபவுண்டேஷன்’-க்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஸ்கர், மருத்துவமனைக்குச் செல்லாமலும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமலும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறி வந்தவர். இந்நிலையில் அவரது அமைப்பு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப் பிரசவம் செய்து கொள்ள பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தது மாவட்ட சுகாதாரத் துறை.

இது குறித்து போலீஸ் தரப்பு, ‘இதைப் போன்ற விளம்பரங்களைப் பார்த்து பெண்கள் மிக அபாயகரமான பயிற்சிக்கு ஆட்டுப்பட்டு விடலாம்’ என்று கூறியுள்ளனர்.

பாஸ்கர் மீது சட்டப் பிரிவுகள் 420 மற்றும் 511 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்கர், கோவையில் ‘அனடோமிக் தெரபி ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பு மருந்து, மாத்திரை இல்லாமலேயே அனைத்து வித நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. பாஸ்கர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பயிற்சி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது அவரது அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணுக்கு, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். இதனால், அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை கிளப்பிய நிலையில் தான், பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.