This Article is From Oct 18, 2018

கேரளாவில் பந்த்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதைத் தடுத்தப் போராட்டக்காரர்கள்!

சன்னிதானம், பாம்பா, நிலக்கல், இலவாங்கல் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது

Sabarimala, Kerala:

நேற்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் இள வயது பெண்கள் நுழைவதை போராட்டக்காரர்கள் தடுத்த நிலையில், கேரள அரசு, 5 பேருக்கு மேல் கூடுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. சன்னிதானம், பாம்பா, நிலக்கல், இலவாங்கல் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களிலிருந்து தான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை பாதுகாப்பு கமிட்டி என்று சொல்லப்படும் அமைப்பு, இன்று மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் இருக்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த பந்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஆட்சியில் உள்ள இடதுசாரி அரசுக்கு எதிராக, காங்கிரஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரள அரசு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாது என்று தெரிவித்துள்ளது. இதனால் தான் மற்ற அமைப்புகள் கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

நேற்று பக்தர்களுக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீஸுடன் கை கலப்பில் ஈடுபட்டனர். சில பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். பெண்களைத் தடுக்கும் செயலில் போராட்டக்காரர்களின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். ஊடக நிறுவன வாகனங்கள், பெண் போலீஸாரையும் போராட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் மீது கல் எறிந்ததால், நலிக்கல் மற்றும் பாம்பா ஆகிய இடங்களில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். 12-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

‘சபரிமலைக்கு வரும் யாரையும் தடுக்க முடியாது. அதேபோல யாரும் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலுக்குள் வந்து யார் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம்’ என்று கேரள காவல் துறையின் மூத்த அதிகாரி லோக்நாத் பேரா கூறியுள்ளார்.

‘சபரிமலை விவகாரத்தில் இப்படிப்பட்ட சூழல் நிலவக் கூடாது. கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் நடக்க வேண்டும்’ என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

.