மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலாவது டெஸ்ட்டை 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் இரண்டாவது டெஸ்ட்டில் பங்களாதேஷ் களமிறங்கியது. டாஸில் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. மெகமத்துல்லாவின் சதம், சஹிப் அல் ஹசன், லிட்டன் தான், சதாம் இஸ்லாம் ஆகியோரது அரை சதத்துடன் 508 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் தரப்பில் மெஹந்தி ஹசன் 7 விக்கெட்டுகளையும், ஷகிப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
ஃபாலோ ஆனை தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் மீண்டும் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதிலும் மெஹந்தி ஹசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த டெஸ்ட்டை இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வென்றது. டெஸ்ட் வரலாற்றில் பங்களாதேஷின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். மேற்கிந்திய தீவுகளின் 40 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.
12 விக்கெட்டை இந்த டெஸ்டில் வீழ்த்திய மெஹந்தி ஹசன் ஆட்டநாயகனாகவும், ஷகிப் அல் ஹசன் ஆட்ட தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மெஹந்தி ஹசன் ஒரு டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பங்களாதேஷ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.