Read in English
This Article is From Dec 12, 2019

குடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டத்தால் இந்திய பயணத்தை தவிர்த்தார் வங்கதேச அமைச்சர்!!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. வங்க தேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்க மசோதா வகை செய்கிறது.

Advertisement
இந்தியா Posted by (with inputs from PTI)

வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

New Delhi:

இந்தியாவில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், தனது இந்திய பயணத்தை வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் ரத்து செய்திருக்கிறார். 

அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 12-ம்தேதியான இன்று அவர், இந்தியாவுக்கு வரவேண்டும் என்பது பயணத் திட்டமாக இருந்தது. மாலை 5.20-க்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இங்கு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் அதனை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டததில் ஈடுபட்டனர். 

Advertisement

புதன்கிழமை மாலையில் 4 முக்கியமான இடங்களில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். வடகிழக்கு மாநிலத்தில் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், மாநிலங்களவையில் நேற்று மசோதா நிறைவேறியது. இதனை ஆதரித்து 125 பேரும், எதர்த்து 99 பேரும் வாக்களித்தனர். 

போக்குவரத்தும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ரயில்கள் சேவை நிறுத்தம், பஸ் சேவை முடக்கம் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன. கவுகாத்தியிலிருந்து திப்ருகர் இடையே செயல்படும் விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

அசாமின் மிகப்பெரும் நகரமான கவுகாத்தியில்தான் போராட்டம் அதிகம் காணப்படுகிறது. அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 10 மாவட்டங்களில் மொபைல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலின் வீட்டை போராட்டக்காரக்ள் தாக்கக் கூடும் என்பதால் திப்ருகர் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லகிநகர் பகுதியில் போராட்டக்காரர்கள் முதல்வர் வீடு மீது கற்களை எரிந்துள்ளனர். மத்திய அமைச்சர் துலியாஜினின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. 

இன்று காலையில் ட்வீட் செய்த பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை திருத்த மசோதா குறித்து அசாம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார். யாரும் அசாம் மக்களின் உரிமையை பறிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இன்டர்நெட் சேவையும், அசாமில் 48 மணி நேரத்திற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிபுரா மாநிலத்தில் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. 

மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்களன்று 334 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. நேற்று மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாவிட்டாலும், மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது.

Advertisement

Advertisement