This Article is From Mar 04, 2020

'மேற்கு வங்கத்தில் வாழும், வாக்களிக்கும் வங்கதேசத்தவர் இந்தியர்களே!' - மம்தா பானர்ஜி

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மேற்கு வங்கத்தில் வசிக்கும் ஒருவர் கூட வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

'மேற்கு வங்கத்தில் வாழும், வாக்களிக்கும் வங்கதேசத்தவர் இந்தியர்களே!' - மம்தா பானர்ஜி

டெல்லியில் நடந்ததைப் போன்று மேற்கு வங்கத்தில் வன்முறை நடக்காது என்கிறார் மம்தா.

ஹைலைட்ஸ்

  • டெல்லியைப் போன்று மேற்கு வங்கத்தில் வன்முறை நடக்காது என்கிறார் மம்தா
  • குடியுரிமை தொடர்பாக யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று மம்தா பேச்சு
  • முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அவர்களை ஆதரிக்கிறார் என்று பாஜக விமர்சனம்
Kaliaganj, West Bengal:

மேற்கு வங்கத்தில் வாழும், வாக்களிக்கும் வங்கதேசத்தவர் அனைவரும் இந்தியர்களே என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்கத் தேவையில்லை என்றும் மம்தா கூறியிருக்கிறார். 

டெல்லியில் நடந்த வன்முறையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசே காரணம் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கலியாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது-

வங்க தேசத்திலிருந்து இங்கு வந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள்தான். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு விட்டது. மீண்டும் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். அவர்கள் இங்கு நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள், பிரதமர், முதல்வர்களைத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தேர்வு செய்தவர்களை இந்தியக் குடிமக்கள் இல்லையென்கிறார். அவர்களை நம்ப வேண்டாம்.

குடியுரிமை தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஒரு குடிமகன்கூட வெளியேற்றப்பட மாட்டார்கள். மேற்கு வங்கத்தை மறக்க வேண்டாம். டெல்லியில் நடந்த சம்பவம் போன்று மேற்கு வங்கத்தில் ஏதும் நடக்காது.

மேற்கு வங்கத்தை இன்னொரு டெல்லியாக, இன்னொரு உத்தரப்பிரதேசமாக நாங்கள் மாற்ற விட மாட்டோம். 

இவ்வாறு அவர் பேசினார். 

முஸ்லிம் வாக்கு வங்கிக்காக மம்தா பானர்ஜி அவர்களை ஆதரித்து வருகிறார் என்று பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

.